கல்வி

ஒன்றாம் வகுப்பு முதலே கணினி வழிக் கல்வி..அசத்தும் கேரளா

webteam

வரும் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதலே கணினி வழிக் கல்விக்கு மாறுவதாக கேரள மாநில கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஐசிடி (Information and Communications Technology) என்ற தொழில்நுட்பம் வாயிலாக அரசுப்பள்ளிகளில் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி வழிக்கல்வி கேரளாவில் கடந்த 2005ம் ஆண்டு முதலே வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஐசிடி தொழில்நுட்பம் வழியிலான கணினி வழிக் கல்வியினை ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட இருப்பதாக கேரள கல்வித்துறை அமைச்சர்  ரவீந்திரன் தெரிவித்தார். இதற்காக இ-வித்யா (e@Vidya) என்ற பெயரில் புதிய ஐசிடி தொழில்நுட்பம் கொண்ட பாடப்புத்தகம் 5 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும், மாணவர்களுக்கான பிரத்யேக கணினி இயங்குதளம் மற்றும் பாடம் குறித்த தகவல்கள் அடங்கிய டிவிடியையும் கேரள கல்வித்துறை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐடி@ஸ்கூல் (IT@School) என்ற பெயரில் அமல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்துக்காக கேரள மாநிலத்தில் உள்ள 8,918 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணினி வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டத்தின் படி பயிற்றுவிக்க 70,602 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இதற்காக இணைய இணைப்பு வழங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளதாகவும் கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது.