கல்வி

1-9 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி ஆண்டு இறுதித் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்

1-9 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி ஆண்டு இறுதித் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு திட்டமிட்டப்படி இறுதித்தேர்வுகள் நடைபெறும் என்றும், ஆல்பாஸ் என பரவும் தகவல் தவறானது எனவும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் நிகழ் கல்வியாண்டில் மே மாதம் வரை வகுப்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. மே 6 ஆம் தேதி முதல் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோன்று தமிழகத்திலும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை, திட்டமிட்டப்படி ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்றும், மே 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது.

விரைவில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைககள் தொடர்பான ஆலோசனைகள் கூட்டமானது சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இம்மாத தொடக்கத்திலேயே நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும்  தேர்வுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக்கூட்டத்தின் முடிவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “பொதுத்தேர்வை பொறுத்தவரையில் எந்த வித சச்சரவுகளுக்கும் இடமின்றி பொதுத்தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.