கல்வி

”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்

நிவேதா ஜெகராஜா

அரசுப் பள்ளிகளில் வரும் ஜூன் 13-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இத்தனை வருடங்களாக பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரும் கல்வியாண்டில் பள்ளி தொடங்கிய பிறகே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி அவை முடிவடைந்துவிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலரும் கேள்வியெழுப்பி வந்த நிலையில், தற்போது அதுபற்றிய அறிவிப்பு  வெளியாகியுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட இருக்கின்றது.

தமிழ்நாட்டில் இந்த கோடை விடுமுறைக்குப் பின் வரும் கல்வியாண்டில் 10,000-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள், வரும் 13-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இவர்களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் வரும் கல்வியாண்டுக்கான (2022-23) வகுப்புகள் தொடங்க உள்ளன.