கல்வி

சத்தியமங்கலம்: பள்ளி பாடம் மறக்காமல் இருக்க டியூசன் எடுக்கும் பழங்குடியின தம்பதி

kaleelrahman

கொரோனா பரவலை தடுக்க  பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள் பள்ளியில் படித்த பாடத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காக பழங்குடியின தம்பதியினர் நாள்தோறும் டியூசன் எடுத்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில், காளிதிம்பம் மலைக்கிராமம் அமைந்துள்ளது. மானாவாரி விவசாயத்தை நம்பி இக்கிராமத்தில் 75 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. யானைகள் அடிக்கடி விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயத்தில் போதிய வருவாயின்றி இருப்பதால் இங்குள்ள பழங்குடியின குழந்தைகள் மேல்நிலைக்கல்வி படிக்க தலமலை, கேர்மாளம், ஆசனூர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் கடந்த ஒராண்டாக மூடப்பட்டு தங்கும் விடுதிகளில் இருந்த குழந்தைகள் மீண்டும் காளிதிம்பம் கிராமத்துக்கு வந்துவிட்டனர். பள்ளி மூடப்பட்டதால் குழந்தைகள் பெற்றோருடன் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொலைத்தொடர்பு வதியில்லாத இக்கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூரத்தி என்ற பழங்குடியின இளைஞர் ஆரம்ப கல்வி முதல் மேல்படிப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து தற்போது இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்திகிறார். இவரது மனைவி கௌசல்யாவும் பிஎஸ்சி பிஎட் பட்டாதாரி ஆவர். கொரோனாவால் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி இடைநிற்றலை ஏற்படுத்துவதோடு படித்த பாடங்களும் மறந்துவிடும் என கருதிய இத்தம்பதி, குழந்தைகளை ஒன்று சேர்க்க முயற்சி எடுத்தனர்.

கிராமத்தில் உள்ள சத்துணவு கூடத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிக்கப்பட்ட துவக்க காலத்தில் 2020-ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு டியூசன் எடுக்க ஆரம்பித்தனர். இதில், ஆரம்ப கல்வி முதல் பிளஸ் 2 வரை 30 மாணவ மாணவிகளுக்கு அந்தந்த பாடத்தை நடத்தினர். தினமும் 4 மணி நேரம் அடிப்படை ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை அவர்கள் புரியும்படி எளிதாக கற்று கொடுத்தனர். மாணவர்களுக்கு வாராந்திர தேர்வு, ஒப்புவித்தல், கரும்பலகையில் எழுதி பார்த்தல் போன்ற பயிற்சியால் அவர்கள் தங்களை தயார் படுத்திக்கொண்டனர்.

முனைவர் சத்தியமூர்த்தி, மனைவி கௌசல்யா கற்றலின் ஆர்வத்தை ஏற்படுத்தியதால் குழந்தைகள் காலையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கொரானா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி வரிசையாக பள்ளிக்கு செல்வதை போன்ற உணர்வுடன் சென்றனர். இது பள்ளிதான் என அவர்களை ஒருங்கிணைத்து கற்றலில் இனிமையை உணர்த்திய சத்தியமூர்த்தி தம்பதியரின் முயற்சிக்கு ஒரு சல்யூட்.

இது குறித்து சத்தியமூர்த்தி கூறுகையில் கல்வியால் மட்டுமே மேம்படமுடியும் என கருதிய எனது பெற்றோர் என்னை அரசுப் பள்ளியில் சேர்த்து முனைவர் பட்டம் வரை பெற உதவினர். கல்வியால் இந்த சமுதாய பொறுப்பை உணர்ந்துள்ளேன். கல்வியால் மட்டுமே உயரமுடியும் என்பதால் கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவ மாணவிகள் பள்ளியில் பயில்வதை போலவே இங்கு வரவழைத்து கற்று கொடுக்க துவங்கினோம். வாரத்தில் 5 நாள்கள் 4 மணிநேரம் கற்றுக் கொடுத்தோம். இங்குள்ள மாணவ மாணவிகள் என்னைபோல படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பது எனது கனவு. அதற்கு பின்பு வரும் மாணவர்கள் இந்த டியூசனை தொடர்ந்து நடத்துவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.