கல்வி

கவின்கலை படிப்பு பல கலைகளை கற்றுக்கொள்ள வித்திடும் - சார்பட்டா பட கலை இயக்குநர்

Sinekadhara

கவின்கலையை கற்கும்போது பல கலைகளை கற்றுக்கொள்ளலாம் என்று சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கலை இயக்குநர் தா.ராமலிங்கம் கூறியுள்ளார்.

ஓவியம், சிற்பம், படம் வரைதல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதே கவின்கலை படிப்புகள். நல்ல கற்பனை வளம், சிந்திக்கும் திறன், ஓவியத் திறன் ஆகியவை அவசியம். கவின்கலைக்காக தமிழ்நாடு அரசின் கீழ் கல்லூரிகள் செயல்படுகின்றன. www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசின் கல்லூரிகள் குறித்து அறியலாம்.

நல்ல பட்டறிவும் கற்பனை வளமும் இருந்தால் துறையில் பிரகாசிக்கலாம். கணினி அறிவோடு கலைகளை கற்கும்போது புதிய பரிணாமத்தை அடைய முடியும்.
பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை, முனைவர் பட்டம் வரை பயில முடியும். ஓவியம், கற்பனைக் காட்சி உருவாக்கம், தொழில்துறைக்கு படம் வரைதல் உள்ளிட்ட பணிகளை செய்யலாம். தொழில்நுட்ப வரைபடங்கள் வரைதல், உள்ளரங்க வடிவமைப்பு, உலோக வடிவமைப்பு ஆகிய வேலைகளும் உண்டு. வண்ணம் பூசுதல், அச்சு தயாரித்தல், சிற்பம், மேடை வடிவமைத்தல் உள்ளிட்டவற்றிலும் சிறக்கலாம்.

இந்நிலையில், கவின் கலை படிப்புகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்து கற்க கசடற நிகழ்ச்சியில் பேசியுள்ளார் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கலை இயக்குநர் தா.ராமலிங்கம். அவர் கூறுகையில், “ஓவியத் திறனை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஓவியத் திறன் கொண்ட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். கவின்கலை கற்றவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளிலும் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. கவின்கலையை கற்கும்போது பல கலைகளை கற்றுக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.