கல்வி

``மத்திய அரசுப் பணிகளில் 1% கூட தமிழர்கள் இல்லாதது வேதனையளிக்கிறது”- ரயில்வே அதிகாரி

நிவேதா ஜெகராஜா

மத்திய அரசு பணியில் 90 சதவீதம் பேர் பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் சேர்ந்தவர்கள் தான் என்றும், ஒரு சதவிகிதம் கூட தமிழகத்தை சார்ந்தவர் இல்லை என்றும், இது தனக்கு வருத்தமளிப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில்கள், ரயில் நிலைய நடைமேடைகள் மற்றும் நிலைய வளாகங்களுக்குள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியும், மாணவர்கள் மோதலை தடுப்பது தொடர்பாகவும் ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாடினர். இதில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன், ரயில்வே காவல்துறை எஸ்பி அதிவீர பாண்டியன் மற்றும் கல்லூரி முதல்வர் கஸ்தூரி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

இதையடுத்து ரயில்வே காவல்துறை எஸ்பி அதிவீர பாண்டியன் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், "சென்னையின் பழமையான கல்லூரி மற்றும் பல மேதைகளை உருவாக்கிய கல்லூரியில் படிப்பதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்ப பிண்ணனியை அறிந்து படிப்பில் நாட்டம் செலுத்த வேண்டும்" என்றார். தொட்ரந்து, கல்லூரி மாணவர்கள் சிலர் ரயிலில் அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ காண்பித்து, “மாணவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது. தனியாக சென்றால் அமைதியாக செல்லும் மாணவர்கள், கூட்டம் சேர்ந்தவுடன் குற்றச் செயல்புரிய தூண்டப்படுகிறீர்கள். இப்படி செய்வதால் வாழ்க்கையை இழந்துவிடுவோம் என்பதை மறந்துவிடுகிறீர்கள்.

ஒரு முறை தவறான பாதையை தேர்ந்தெடுத்து குற்றச் செயலில் ஈடுபட்டால் அதன் பாதிப்பு உங்கள் வாழ்வின் இறுதி வரை இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மிகப்பெரும் மேதைகளை உருவாக்கிய கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நீங்கள், நல்ல வழியில் படித்து தேர்ச்சி பெற்று வாழ்க்கையை நல்ல முறையில் அமைக்க எண்ணம் கொள்ள வேண்டும். ஒரு பட்டிக்காட்டில் பிறந்து, அரசுக் கல்லூரியில் பயின்று இன்று இந்த பதவியை அடைய என்னால் முடியும் என்றால் உங்களாலும் இது முடியும் என்பதை உணர்ந்து வாழ்க்கையை நல்வழிப்படுத்துங்கள்" என்றார்.

ரயில்வே காவல்துறையினர் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்த சில மாணவர்கள் விழிப்புணர்வு கவனிக்காமல் இருந்ததால் ரயில்வே காவல்துறை எஸ்பி அதிவீர பாண்டியன் அந்த மாணவர்களை கடுமையாக கண்டித்தார். அவர்களது சிகை அலங்காரங்களை பார்த்து விமர்சித்தார். மேலும் மாணவர்களை மிரட்டியே விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் இறந்த மாணவர் வெங்கடேசனின் தாயார் தேவி மாணவர்கள் மத்தியில் பேசிய போது, "எனது மகனின் மரணத்திலிருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. என்னைப்போலவே உங்களை பெற்றவர்களும் வேதனைபடக்கூடாது. எனது மகன் இக்கல்லூரியில் ரயில் பயணத்தில் இறந்த கடைசி உயிராக இருக்கட்டும்.இனி யாரும் இதுபோன்று ஆபத்தான பயணங்களில் ஈடுபட வேண்டாம் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் பேசுகையில், "எந்த இலக்கிற்காக படிக்கிறோம் என கல்லூரியிலே முடிவெடுத்து கொள்ளுங்கள். அடிப்படை தகுதி 10 ம் வகுப்பு இருந்தால் போதும் அதிக சம்பளத்திற்கு மத்திய அரசு ரயில்வேயில் பணி கொட்டி கிடக்கிறது. மத்திய அரசு ரயில்வே பணிகளில் 90 சதவீதம் பேர் பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்துதான் பணியில் சேருகின்றனர். 1 சதவீதம் கூட தமிழகத்தில் தேர்வாவதில்லை.

தமிழகத்தில் குறைந்தபட்சமாக அரசு தேர்வுகளில் விண்ணப்பிக்க கூட யாரும் முன்வரவில்லை என்பது கோபம் கலந்த வருத்தமளிக்கிறது. தமிழகத்தை போல தரமான கல்வி பிற மாநிலங்களில் கிடைக்காதபோதும், அவர்கள் தங்களின் கடின உழைப்பின் மூலம் தேர்வாகின்றனர்" என்று ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.