கல்வி

கல்விக்கட்டணம் செலுத்தாததை சான்றிதழில் குறிப்பிடும் தனியார் பள்ளிகள்: ஓபிஎஸ் கண்டனம்

Veeramani

வறுமை காரணமாக தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் அரசு பள்ளிகளுக்கு மாறும் மாணாக்கரின் மாற்றுச்சான்றிதழில் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை எனக் குறிப்பிடுவது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கொரோனா கொடுந்தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றினார்கள். இவ்வாறு தனியார் பள்ளிகளிலிருந்து மாறும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழில் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பிடும் சூழல் உருவாகியிருக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் ஒரு இழுக்கை, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அவர்களை அவமானப்படுத்துவது போல உள்ளது.

கொரோனா காலத்தில் அனைத்து பள்ளிகளும் நேரடி வகுப்புகள் நடத்தாத காரணத்தால் வெகுவாக செலவு குறைந்துவிட்ட நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை குறைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு, இதுகுறித்து மேல்முறையீடு செய்து மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கை போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.