தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்க உள்ளது. தயாரிப்புகளோடு மாணவர்களும், ஏற்பாடுகளோடு தேர்வுத் துறையும் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.
மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ள 12-ஆம் வகுப்பு தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத உள்ளனர். இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 103 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதவுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கைப்பேசி எடுத்துவரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு பொதுத்தேர்வுகள் எழுதுவோர் தங்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துக்கள், சந்தேகங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 8012594105,8012594115, 8012594120, 8012594125 ஆகிய எண்ணில் தொடர்வுகொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள வினாத்தாள் முறைப்படி தேர்வை சந்திக்க உள்ள கடைசி பிரிவு 12ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தாண்டு மாணவர்கள்தான். அடுத்த ஆண்டு முதல் புதிய வினாத்தாள் முறைப்படியே தேர்வு நடைபெற உள்ளது. பழைய முறையாக இருந்தாலும் புதுவிதமான கேள்விகள் இடம்பெறுமோ என்ற அச்சம் மாணவர்களிடையே உள்ளது. வினாத்தாள் எப்படி அமைந்தாலும், அச்சம் இல்லாமல் தன்னம்பிக்கையோடு தேர்வை அணுகினால் வெற்றி பெறலாம் என உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.