தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,737 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,98,763 மாணாக்கர் தேர்வெழுதவிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மாணவியர் 4,80,837 பேர் ஆவர். மாணவர்கள் 4,17,994 பேர் மற்றும் ஒரு திருநங்கை ஆவார். இவர்களைத்தவிர, சிறைக்கைதிகள் 98 பேரும் தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 34,868 தனித்தேர்வர்களும் ப்ளஸ் டூ தேர்வை எழுதவுள்ளனர். தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 5,69,304 ஆகும். புதுச்சேரியில் 143 பள்ளிகளிலிருந்து 33 தேர்வு மையங்களில் 15,660 மாணாக்கர் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.