கல்வி

இன்று தொடங்குகிறது துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வு

webteam

துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் துணை மருத்துவப் பட்டப்படிப்பு, மருந்தாளுனர், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஆப் டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு 121 மருத்துவக் கல்லூரிகளில் 2,526 இடங்கள் உள்ளன. இதே போல் 348 சுயநிதிக் கல்லூரிகளில் 15,307 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கு 87,764 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு இன்று முதல் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நாளை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் வரும் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டு 24 ஆம் தேதி சேர்க்கை ஆணையை பெற்றுக் கொள்ளலாம். பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி மாலை வரை நடைபெறுகிறது.

அதே போல் தரவரிசைப் பட்டியலில் 12,381 முதல் 28,583 வரை உள்ளவர்கள் வரும் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் எனவும் இவர்களுக்கான முடிவுகள் அக்டோபர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினமே சேர்க்கை ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முறைகள் உள்ளிட்ட விவரங்களை tnmedicalselection.net, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



துணை மருத்துவ படிப்பதற்கான இணை வழி கலந்தாய்வு

* 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கு 87,764 பேர் ஆன்லைனில் விண்ணப்பம்

* சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நாளை மாலை 5 மணி வரை நடைபெறும்

* பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி மாலை வரை நடைபெறும்

* இடங்களைப் பெற்ற மாணவர்கள் அக்.10 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்