கல்வி

”ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள்”- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். இன்று இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய அமைச்சர், “அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் இந்த பருவ செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை அத்தேர்வுகள் நடத்தப்படும்” எனக்கூறியுள்ளார். இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் பேசுகையில், “பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் இந்த முறை நடத்தப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும். கொரோனா பரவலை கருத்தில்கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான முறையில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். தேர்வு விடைத்தாள்களை மாணவர்கள் மொத்தமாகவும் அனுப்பிவைக்கலாம். ஆன்லைன் தேர்விலிருந்து இறுதி செமஸ்டரிலுள்ள மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும்” என்றார்.