கல்வி

''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்!

''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்!

webteam

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் குடிமை பணிகளுக்கான தேர்வு முடிவு ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வில் 759 பேர் தேர்ச்சி பெற்றனர். விடா முயற்சி மூலம் வெற்றி பெற்ற வெற்றியாளர்களில் பெரும்பாலானோர்  பொதுவான சில விஷயங்களை பின்பற்றியுள்ளனர். அவற்றில் முக்கியமானது சோஷியல் மீடியாக்களுக்கு நோ சொல்லி இருக்கிறார்கள்.

சோஷியல் மீடியாக்கள் மூலம் நன்மையும் இருந்தாலும் அதனால் அதிக அளவில் கவனம் சிதற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் தேர்வர்கள், தங்களது சோஷியல் மீடியா கணக்குகளை மூடிவிட்டு தான் படிப்பதையே தொடங்கியிருக்கிறார்கள்.

இது குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள யுபிஎஸ்சியில் முதலிடம் பிடித்த கனிஷக், ''சமூக வலைதளங்கள் நேர விரயம் என்று நான் நினைத்தேன்.அதனால் என்னுடைய பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் இருந்து வெளியேறிவிட்டேன். இன்ஸ்டாகிராமில் இருந்தாலும் எப்போதாவது தான் பயன்படுத்துவேன்'' என்று தெரிவித்துள்ளார். 4வது மற்றும் 5ம் இடம் பிடித்தவர்களும் இதையே தான் செய்துள்ளனர். அவர்களும் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.

17ம் இடம் பிடித்த ராகுல், ஒரு படி மேலே போய் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையே விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். தேர்வு முடிந்த பின்னரே ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.10ம் இடம் பிடித்த தன்மே வஷிதா, தான் சில சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். செய்திகளை அறிய பேஸ்புக்கின் சில பக்கங்களை பின்தொடர்வேன் என்றும், யூ டியூப்பில் படிப்பு தொடர்பான வீடியோக்களை பார்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சிலர் படிப்பு தொடர்பான குழுவில் இணைந்திருக்க வாட்ஸ் அப் உதவுவதாகவும், அதனால் வாட்ஸ் அப் மட்டும் பயன்படுத்தினேன் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தேர்வானவர்களிடம் உள்ள மற்ற பொதுவான விஷயம் என்னவென்றால், முதல் 50 இடங்கள் பிடித்தவர்களில் 27 பேர் பொறியியல் பட்டதாரிகள்.