கல்வி

"10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி பாடவேளை கிடையாது" - பள்ளிக்கல்வித்துறை

webteam

6 முதல் 9 ஆம் வகுப்பினருக்கு மட்டுமே உடற்கல்வி பாடவேளை உண்டு எனவும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடவேளை கிடையாது எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

உடற்கல்வி பாடவேளை நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள முதன்னை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதில் நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 வரையிலான வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் அவ்வகுப்புகளை நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத் தேர்வுகள் நடைபெற இருப்பதால், அவ்வகுப்புகளை தவிர்த்து மற்ற வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு வழங்கி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உடற்பயிற்சி வழங்குமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.