கல்வி

உலக மகளிர் தினம்: பார்வை மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் தோளோடு தோள் நிற்கும் ’ரிஷிவதனா’!

webteam

பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம். 

உலக மகளிர் தினத்தில் சாதித்த பெண்களின் வரிசையில் அடுத்ததாக, ரிஷி வதனா இவர்கள் செய்து வரும் தொண்டினைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருமே சமமானவர்கள் தான். அவர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாக சற்றே மாற்று நிலையில் இருந்தாலும் அவர்களையும் குறைவான எண்ணாமாமல் சமமாக பாவிப்பதே மனிதனின் மாண்பு. அதனால்தான் அப்படியானவர்களை சிறப்பு செய்யும் வகையில் மாற்றுத் திறனாளிகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதனாக பிறந்து உலகம் என்பது எப்படி இருக்கும் என்பதை காண முடியாமல் இருப்பவர்களை நாம் பார்வை மாற்றுத்திறனாளி என்று சொல்கின்றோம். அத்தகைய மாற்றுத்திறன் உள்ளோருக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கடினமாக வாழ்க்கையில் ஒளி ஏற்றிக்கொண்டிருப்பவர் சமூக செயற்பாட்டாளர் ரிஷிவதனா 

ரிஷி வதனா: (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஒருங்கிணைப்பாளர்)

இவர் திருச்சியில் பிறந்தவர். இவரது தந்தை சந்துரு மாணிக்கவாசம், தாயார் ஸ்டெல்லா பிரேமா.
ரிஷி வதனா, சென்னையில் தனியார் பள்ளியில் படிப்பை முடித்தவர், கணித பாடத்தில் முதுகலை படிப்பையும் ஆய்வியல் நிறைஞர் படிப்பையும் முடித்துள்ளார்.

இவர் இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற பொழுது, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பாடங்களைச் சொல்லி தருவதற்கும், தேர்வு எழுதுவதற்கு உதவும், ”ஸ்கிரைப்” தேவைப்பட ஆர்வத்துடன் சென்று அவர்களுக்கு உதவியுள்ளார். கல்வியின் மீது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கொண்டிருந்த ஆர்வத்தை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

பார்வை மாற்றுத்திறனாளிகள், கல்வி தொடர்பாக எந்த உதவியை எச்சமயத்தில் கேட்டாலும், தயங்காமல் செய்து வந்திருக்கிறார். கூடவே அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளும்பொழுது அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதுடன், தனது தோழிகளையும் இதில் ஈடுபடுத்தியுள்ளார்.

இவரின் சேவையை பாராட்டி, ‘லிட் த லைட் ட்ரஸ்ட்” என்ற அமைப்பு, “ப்ரெய்ல் பெட்டாலியன்” என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெங்களூரில் உள்ள ’விஷன் எம்பவர்’ என்ற அறக்கட்டளையில் கல்வி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்க, இதன் மூலம் பார்வையற்ற குழந்தைகளுக்கு கல்வியுடன் கணித விளையாட்டுக்களையும் பயிற்றுவித்து வருகிறார்.

- ஜெயஸ்ரீ அனந்த்