New Zealand Extends Post-Study Work Visa to 4 Years for Eligible Indian PhD Graduates AI
கல்வி

நியூசிலாந்தில் 4 ஆண்டுகள் WORK VISA! இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்!

நியூசிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. PhD முடித்தவர்களுக்கு இனி 4 ஆண்டுகள் வரை பணி விசா... யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்கும்? முழு விவரங்களைப் பார்க்கலாம்!

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

இந்திய மாணவர்களுக்கான பணி விசா காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது நியூசிலாந்து அரசு. யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்க இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்!

இந்திய PhD மாணவர்களுக்கான படிப்புக்குப் பிந்தைய பணி விசா காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நியூசிலாந்து அரசு நீட்டித்துள்ளது. முனைவர் பட்டம் (PhD) பெற்ற தகுதியுள்ள பட்டதாரிகள், படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்குக் கூடுதலாக ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (Free Trade Agreement - FTA) ஒரு பகுதியாக குடியேற்றக் கொள்கையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நியூசிலாந்து குடியேற்றத் துறையின் (Immigration New Zealand) அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட நியூசிலாந்து கல்வி நிறுவனத்தில் PhD படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் இந்திய மாணவர்கள், குடியேற்ற விதிமுறைகள் மற்றும் தகுதிகளைப் பூர்த்தி செய்தால் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் செல்லுபடியாகும் பணி விசாவைப் பெற முடியும். இந்த நீட்டிப்பு தகுதியுள்ள இந்திய முனைவர் பட்டதாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

New Zealand 4-Year Work Visa for Indian PhD Students: Eligibility and Benefits

பொதுவாக, ஹானர்ஸ் (Honours) உட்பட இளங்கலைப் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை பணி வாய்ப்பைப் பெற முடியும். தகுதியுள்ள முதுகலைப் பட்டதாரிகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதி வழங்கப்படும்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) உள்ளிட்ட தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத் துறைகளில் முதல் வகுப்பு ஹானர்ஸ் (First Class Honours) பட்டம் பெறும் இந்திய மாணவர்கள் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை படிப்புக்குப் பிந்தைய பணி வாய்ப்பைப் பெறலாம்.

இருப்பினும், இந்தச் சலுகைகளைப் பெற மாணவர்கள் குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் மற்றும் குடியேற்ற விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான நிபந்தனைகள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, இந்தியக் குடிமக்களுக்காகப் புதிய Working Holiday திட்டத்தையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்த நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது. இதன்படி, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்தியர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் அதிகபட்சமாக 1,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நியூசிலாந்தில் ஒரு வருடம் வரை தங்கியிருக்க அனுமதி பெறுவார்கள்.

New Zealand 4-Year Work Visa for Indian PhD Students: Eligibility and Benefits

இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்திய மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர்ந்து சர்வதேச வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, PhD பட்டதாரிகளுக்கு 4 ஆண்டுகள் வரை பணி விசா வழங்கப்படுவது, நியூசிலாந்தில் ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.