கல்வி

நல்லாசிரியர் விருதுடன் தரப்பட்ட பணத்தில் ஏழை மாணவர்களுக்கு செல்போன் வழங்கிய நெல்லை ஆசிரியை

நிவேதா ஜெகராஜா

தமிழக அரசினால் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர், அரசு விருதுடன் வழங்கிய பணத்தை கொண்டு போன் வாங்கி, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கைகளால் வழங்கி உதவியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஆங்கில பாடம் நடத்துகிறார் ஆசிரியர் இசபெல்லா செல்லகுமாரி. கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 10 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதினை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கி கௌரவித்தார். அந்த 10 பேர்களில் ஒருவர்தான், ஆங்கில ஆசிரியர் இசபெல்லா செல்லகுமாரி. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிகள் செயல்படவில்லை என்பதால், அந்த நேரத்தில் ஆசிரியர் இசபெல்லா செல்லகுமாரி கிராமங்களுக்கு நேரடியாக சென்று அங்கு மாணவ மாணவிகளை மரத்தடியில் தனிநபர் இடைவெளியுடன் அமர வைத்து பாடம் நடத்தியுள்ளார்.

தெய்வநாயகிப்பேரி, சுருளை, மறவன்குளம், சின்ன மூலக்கரைப்பட்டி, மகிழ்ச்சி புரம், பெருமாள் நகர், மூலக்கரைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நாள்தோறும் சென்று மாணவ மாணவிகளுக்கு ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார். மேலும் "கலா உத்சவ்" என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளை மாநில அளவில் கொண்டு சென்று பங்கேற்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கல்வி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய நாடகப் போட்டிகளிலும் மாணவிகளை மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்து மாநில அளவில் கொண்டு சென்ற முயற்சியும் இவருடையது. அரசின் கல்வி தொலைக்காட்சியிலும் பாடம் நடத்தி வந்திருக்கிறார் இவர். தொலைபேசி இல்லாத மாணவர்களின் நலன் கருதி ரேடியோவிலும் பாடம் நடத்தியுள்ளார் ஆசிரியர் இசபெல்லா செல்லகுமாரி.

இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று தமிழக அரசு நெல்லை மாவட்டத்தில் 10 ஆசிரியர்களை தேர்ந்து எடுத்து நல்லாசிரியர் விருது வழங்கியது. இந்த விருதினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரடியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கினார். அப்போது பரிசாக பத்தாயிரம் ரூபாய் நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை நல்லவிதமாக பயன்படுத்த எண்ணி தனக்கு பாராட்டு கிடைக்க காரணமான மாணவர்களில் ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து தந்தை இல்லாத 8ஆம் வகுப்பு மாணவர், ஏழ்மை நிலையில் இருக்கும் 10 ம் வகுப்பு மாணவி என இருவருக்கு இந்த பணத்தில் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் இனி அவர்கள் தடையின்றி ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க முடியும் என தெரிவித்தார். வாங்கிய செல்போன் இரண்டையும், இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களின் கைகளால் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் வழங்கினார். செல்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்பது கஷ்டமாக இருந்தது இனி நாள்தோறும் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்று நன்றாக படிப்பேன் என மாணவி உருக்கமாக தெரிவித்தார்.

நெல்லை நாகராஜன்.