கல்வி

குஜராத், பீகாரிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்? - வெளியான அதிர்ச்சி தகவல்

kaleelrahman

குஜராத், பீகார் மாநிலங்களிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேனியில் நடைபெற்ற ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மருத்துவ இடம் பிடித்ததாக தேனி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சென்னை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அவரது பெற்றோர் என 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்பவரை சிபிசிஐடி அதிகாரிகள் தேடி வந்த நிலையில், அவர் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. குஜராத், பீகார் மாநிலங்களில் இருந்து முதன்முதலாக நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடங்கியதாகவும், அந்த மாநிலங்களில் பல ஏஜெண்டுகள் இருப்பதாகவும் ரஷீத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குஜராத் மற்றும் பீகாரில் உள்ள ஏஜெண்டுகளை பிடித்து விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.