நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஓசூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவன் முதலிடம் பிடித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை டெல்லியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை ஓசூரைச் சேர்ந்த சந்தோஷ்(656) என்ற மாணவர் பெற்றார். 2ஆவது இடத்தை கோவையைச் சேர்ந்த முகேஷ் கண்ணாவும்(655), 3ஆவது இடத்தை திருச்சியைச் சேர்ந்த சையது ஹபீசும்(651) பிடித்தனர். இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணாவர்கள் 27,488 சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் பேர் 3,418. கடந்த ஆண்டுகளில் பயின்று தற்போது விண்ணப்பித்த மாணவர்கள் 5,636 ஆவர்.
தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் நாளை முதல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும், பல் மருத்துவப் படிப்பில் சேர செப்டம்பர் 10 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நீட் மதிப்பெண்களை மாணவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்திலும் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.