நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கும் நிலையில், தேர்வுக்கான விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 12.41 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் சதவிகிதம் கடந்த ஆண்டைவிட 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பீகாரில் 28 சதவிகிதமும், உத்தர பிரதேசத்தில் 16 சதவிகிதமும், ஆந்திராவில் 7 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. கேரளா, புது டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. மேலும், கொரோனா காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 546 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த ஆண்டு 15 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 238 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.