கல்வி

“பட்டுப்புழுவியல்துறை மாணவர் பிரச்சனை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்” ஏ.கே.செல்வராஜ் உறுதி

நிவேதா ஜெகராஜா

அரசு வனக்கல்லூரியின் பட்டுப்புழுவியல் துறை மாணவர் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர சீறிய முயற்சி மேற்கொள்ளப்படும் என மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஐந்தாவது நாளாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகளை சந்தித்து பேசிய பின், இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் ஐந்தாவது நாளாக தங்களது தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பட்டுப்புழுவியல் துறை பட்டப்படிப்பு, கடந்த 2011-ம் ஆண்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் துவக்கப்பட்டது. பின்னர் 2014 ம் ஆண்டில் இத்துறை இப்பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. துறையாக இயங்கும் பட்டுப்புழுவியல் துறையை கல்லூரியாக தரம் உயர்த்தவே இந்த மாற்றம் செய்யப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், 2021 – 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இளநிலை அறிவியல் (B.sc  sericulture) படிப்பான பட்டுப்புழுவியல் படிப்பு இடம்பெறவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த இத்துறை சார்ந்த கல்வி பயிலும் மாணவ மாணவியர், தங்களது எதிர்க்காலம் குறித்து கேள்வி எழுப்பி ‘மீண்டும் பட்டுப்புழுவியல் துறைக்கு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்’ என்ற கோரிக்கையோடு கடந்த 8 ம் தேதி முதல் கல்லூரியின் உள்ளே உள்ள பட்டுப்புழுவியல்துறை அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.

பல்கலைகழகம் சார்பில் நடத்தபட்ட பல பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று 11 ம் தேதி வனக்கல்லூரியில் பட்டுப்புழுவியல் துறைக்கு மட்டும் காலவரையற்ற விடுமுறை அறிவித்த நிர்வாகம், மாணவர்கள் தங்கியிருந்த கல்லூரி விடுதியினை காலி செய்து அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது.

கல்லூரி நிர்வாகத்தின் அந்த உத்தரவின்பேரில், விடுதி அறைகளில் இருந்து தங்களது உடமைகளை எடுத்துக்கொண்ட மாணவ மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகளை சந்தித்து மேட்டுப்பாளையம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பட்டுப்புழுவியல் துறை மாணவர் பிரச்சனை குறித்து நாளை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். நாளை ஒரு நாள் மட்டுமே சட்டமன்றம் செயல்படும் என்பதால் நாளையே தீர்மானம் கொண்டு வர தீவிர முயற்சி எடுக்கப்படும், இயலாவிட்டால் தொடர்புடைய அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனை எடுத்து செல்லப்பட்டு மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.