கல்வி

“குரூப் 1 வினாத்தாள், மாதிரி விடைத்தாள் இரண்டிலுமே தவறு”- நிபுணர் குழு அறிக்கை

“குரூப் 1 வினாத்தாள், மாதிரி விடைத்தாள் இரண்டிலுமே தவறு”- நிபுணர் குழு அறிக்கை

Rasus

குரூப் 1 தேர்விற்கான வினாத்தாள், மாதிரி விடைத்தாள் இரண்டிலுமே தவறுகள் இருந்ததாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது எனவும் டிஎன்பிஎஸ்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். தேர்வில் கேட்கப்பட்ட 150 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டி.என்.பி.எஸ்.சி-க்கு கோரிக்கை மனு அளித்தனர். இதை ஏற்காமல் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதனை எதிர்த்து விக்னேஷ் தொடர்ந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது 24 கேள்விகள் தான் தவறானவை என்றும், மாதிரி விடைத்தாளில் குறைபாடு ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அரசு பணியாளர் தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

அந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் தாரா பாய் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆணையம் வெளியிட்ட மாதிரி விடைத்தாளில் 96 தவறான பதில்கள் அமைந்துள்ளதாக 4 ஆயிரத்து 390 விண்ணப்பதாரர்கள் மனு அளித்ததால், அதை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குழு அளித்த அறிக்கையில், மாதிரி விடைத்தாளில் 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் வினாத்தாளில் 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர 7 கேள்விகளுக்கான மாதிரி விடைகளும் தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், தேர்வு எழுதிய அனைவருக்கும் கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், அதன்பின்னரே முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசு பணியாளர்கள் தேர்வின் மதிப்பெண்களை இயந்திரத்தனமாக வெளியிடக் கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நிபுணர் குழுவின் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது என்றும் பதில் மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விக்னேஷ் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.