கல்வி

`மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்’- அமைச்சர் பொன்முடி அதிரடி

நிவேதா ஜெகராஜா

மரபு முறைகளை பின்பற்றாமல் நடத்த உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54 வது பட்டமளிப்பு விழா ஜூலை 13 ம் தேதி நடைபெற்றவுள்ளது. ஆனால் இணை வேந்தரான என்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. மேலும், உயர்கல்வித்துறை செயலாளரிடமோ ஆலோசனை நடத்துவதில்லை. பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கௌரவ விருந்தினராக ஒன்றிய இணை அமைச்சர் முருகன் அழைக்கப்படுவது எவ்வாறு ஏற்புடையது?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசுகையில், “இவ்வாறு, பட்டமளிப்பு விழாவில் கடைபிடிக்கப்படும் மரபு முறைகள் முறையாக எதையும் கடைபிடிக்காத காரணத்தினால் ஆளுநரை கண்டிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம். இது போன்ற பிரச்சினைகள் எழக் கூடாது என்று தான் ஆளுநர் வேந்தராக இருப்பதை நீக்கி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட முதலமைச்சர் வேந்தராக இருப்பதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்தோம். அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இன்னும் கையொப்பம் இடவில்லை அவர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுநராக இல்லாமல் அவர் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்பவர்களில் ஒருவராக உள்ளார். இதே போல அவர் செயல்பட்டால், `ஆளுநரை திரும்ப பெற வேண்டும்’ என்ற தீர்மானம் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஆளுநர் திராவிடம் குறித்து பேசும் போது வரலாற்றை தெரிந்த பின்பு பேசவேண்டும். எத்தனை `ism’ இருந்தாலும் Humanism எனப்படும் மனிதாபிமானம் தான் திராவிட மாடல்” என்று கூறினார்.