கல்வி

இனி படிக்கும்போதே வேலை... தொழிற்சாலை நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு போட்ட ஒப்பந்தம்!

webteam

“உதவி பேராசியர்கள் நியமனம் முறையாக நடைப்பெறுகிறதா என்பது குறித்து குழு அமைத்து கண்காணிக்கப்படும்” என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில், நான் முதல்வன் திட்ட அறிவிப்பின் கீழ் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், டோட் இயக்குனர் ஆகியோர் பங்குபெற்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் மேண்டோ(ஸ்ரீ பெரும்புதூர்)நிறுவனம், வீவீடி என் (பொள்ளாச்சி), கண்ணபிரான் மில்ஸ்(கோவை, மதுரை, பெருந்துறை), கேஜி குழுமம் (கோவை), லட்சுமி மிசின் ஒர்க்ஸ் (கோவை), கேப்ரியல் (விழுப்புரம், ஓசூர்) ஆகிய 6 நிறுவனங்கள் மூலமாக சுமார் 1560 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “முதலமைச்சர் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமே, படிக்கும் போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான். அதன் முன்னெடுப்பாக தான் தற்போது 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “சென்னை பல்கலைக்கழக தேர்வில் கடந்த ஆண்டு வினாத்தாளை இன்றைய தேர்வுக்கு வழங்கியதால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான தேர்வு உரிய முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

மேலும் “அரசு கல்லூரியில் உதவி கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தாலும் கட்டாயம் trb தேர்வு எழுதிய பின் தான் பணியமர்த்தப்படுவார்கள். பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் விவகாரத்தில், தனியாக அறக்கட்டளை நடத்தி அதன் கீழ் பேராசிரியர்களை நியமனம் செய்து வருவதால், உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து, நியமனம் முறையாக நடைபெறுகிறதா என கண்காணிக்கப்படும்” என்று கூறினார்.

“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் கட்ட காலதாமதமானால், ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தகவல் வந்துள்ளது. அந்த கட்டணம் குறைக்கப்படும்” என்று தெரிவித்தார்.