கல்வி

`அனைத்து கல்லூரிகளும் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்ற சுற்றறிக்கை'- அமைச்சர் பொன்முடி பேட்டி

நிவேதா ஜெகராஜா

“மதுரை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மதுரை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக்னாலஜி படிப்பில் மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சமீபத்தில் அறிவிப்புகனை வெளியிட்டு இருந்தார். அதற்கு விளக்கம் அளித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கையில் அனைத்து படிப்புக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். இது குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி ஓசி என்ற பொதுப் பிரிவு பொதுப்பிரிவுனருக்கு 31 சதவீத இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், எஸ்சி பிரிவினருக்கு 18 சதவீதமும், எஸ்.டி பிரிவினருக்கு ஒரு சதவீதம் என்று 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.

மதுரை பல்கலைக்கழகத்தில பயோடெக்னாலஜி பிரிவில் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஓசி பிரிவினருக்கு ஒன்பது இடங்களும், பிசி பிரிவினருக்கு 9 இடங்களும், எம்.பி.சி.க்கு 6 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 5 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு ஒரு இடமும் வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், `அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா விரைவில் நடக்கும். அதற்கான தேதி அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்த அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கை பிறகு இந்த ஆண்டு முழு பாடங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்: ரமேஷ்