கல்வி

``+2-வில் தொழிற்கல்வி படித்தாலும் இனி என்ஜினியரிங் சேரலாம்!”- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், பண்ணிரெண்டாம் வகுப்பில் தொழிற் கல்வி முடித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “ஐடிஐ முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொழிற் கல்வியை முடித்த சுமார் 2000 மாணவர்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், உள்ளிட்ட 6 பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் தொழில் கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜூலை மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி முதல் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். பொறியியல் கல்லூரிகளில் சேர 85,000 பேர் இதுவரை விண்ணப்பித்து உள்ளனர். அப்படி பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு சீட் கிடைக்கும்” என்றும் தெரிவித்தார்.

- செய்தியாளர்: எம்.ரமேஷ்