கல்வி

அரசு வேலைக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்காக அரசு கொடுக்கும் இலவச பயிற்சி மையம் இதோ!

நிவேதா ஜெகராஜா

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்டன்விளையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவசமாக பயிற்சி அளிக்கும் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 20.63 லட்ச ருபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச கையேடுகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் உயரிய நோக்கில் ”நான் முதல்வன்” என்ற திட்டத்தினை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இத்திட்டமானது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அடிப்படை தேவையான பயிற்சிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்கி, இளம் தலைமுறையினரை திறமை வாய்ந்தவர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இதன் மூலம் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படுகின்ற போட்டித்தேர்வுகள், வங்கித்தேர்வுகள், இரயில்வே தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கு இந்த பயிற்சி மையமானது மிகவும் ஊன்றுகோலாக இருக்கும். நீங்கள் பார்வையாளர்களாக இருப்பதை தவிர்த்து, பங்களிப்பாளராக இருக்க வேண்டும் என்றார்.