கல்வி

"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்”- அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

நிவேதா ஜெகராஜா

மருத்துவக் கல்வி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையில் 50 மாணவர்களுக்கான சேர்க்கை ராமநாதபுரம் கல்லூரியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

`சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 163 வது பிறந்தநாள்’ விழாவையொட்டி, தமிழக அரசு சார்பில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் சிங்காரவேலர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் ஆட்சியர் விஜயாராணி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நலனை கருத்தில் கொண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 50 இடங்களை, ராமநாதபுரம் கல்லூரியில் ஒதுக்கீடு செய்ய இருக்கிறோம். ஏனெனில் இப்போதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டட பணிகள் நடந்து வருகின்றன. மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் மத்திய அரசிடமும் எய்ம்ஸ் திட்டத்தின் கட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என பேசி வருகிறோம். இருந்தாலும் இப்போதுதான் கட்டட பணிகள் தொடங்கி இருக்கிறது என்பதால், 150 மாணவர்கள் சேர்க்கை இருக்கும் ராமநாதபுர கல்லூரியில் 50 இடம் எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பாக இந்த கல்வி ஆண்டில் இச்சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அர்ப்ணித்தவர் சிங்கார வேலன்; பல முறை சிறை சென்றவர். சுய மரியாதை, சமத்துவம் போன்றவற்றில் முழு ஈடுபாடு உடையவர். இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டவர் கலைஞர் கருணாநிதி” என்றுகூறி சிங்காரவேலனுக்கு புகழஞ்சலில் செலுத்தினார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைந்துவருவது குறித்து பேசிய அவர், "ஏதாவது அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம். தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக கொரானா பரிசோதனைகளையும் குறைக்கக் கூறி இருக்கிறோம்” என்றார். இவற்றை தொடர்ந்து, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு உறுதிதான். தேர்தல் களத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது” என்று தெரிவித்தார்.