“பள்ளி விடுமுறையை பயன்படுத்தி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு படிக்க வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பின்னர் கீரனூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட12 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, “நீட் தேர்வு விலக்குக்காக ஒருபுறம் சட்டப் போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசு ஹைடெக் ஆய்வகம் மூலமாக மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சி அளித்து அவர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன. அதேநேரத்தில், அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம்.
கடந்த ஆட்சியின்போது, கல்வி தொலைக்காட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. என்றாலும், தற்போது உள்ள சூழ்நிலையில் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. வரும், 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்க உள்ளதால் அந்த மாணவ மாணவிகள் இந்த காலத்தை விடுமுறை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. படிப்பதற்கான நேரமாகவே இதை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், யூ டியூப் மூலமாகவும் பாடம் நடத்துவதை பார்த்து, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளது. அதற்கு இணையாக அரசுப் பள்ளியிலும் வசதிகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம்” எனக் கூறினார்.
சமீபத்திய செய்தி: அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல்