கல்வி

கள்ளக்குறிச்சி: `சான்றிதழ் இழந்த மாணவர்களுக்கு வருவாய்துறை மூலம் நடவடிக்கை'-அமைச்சர் உறுதி

webteam

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்கள் இழந்த மாணவர்களுக்கு வருவாய்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நேற்று அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பள்ளியை ஆய்வு செய்தோம். நீதிமன்றத்திற்கு சென்றதால் மாணவியின் பெற்றோரை நேற்று நேரில் சந்திக்க முடியவில்லை. மறைந்த மாணவியின் தாய் M.com படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி அவருக்கு பணி வழங்குவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக கூறினோம்.

பள்ளியில் சான்றிதழ்கள் எரிந்துள்ளன என்பதால் அருகில் உள்ள தனியார் பள்ளிகள், சக்தி பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளன. நாற்காலி, இருக்கை உட்பட அனைத்தும் பள்ளியில் இருந்து தூக்கி செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 க்கு முதல்வருடன் வீடியோ கான்பரன்சில் நானும், பொதுப்பணித்துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது பள்ளியில் நடந்தது என்ன, தீர்வு என்ன, மாணவர்களின் பெற்றோரின் மனநிலை என்ன என்பது குறித்து முதல்வரிடம் கூறி உள்ளோம். அதனை தொடர்ந்து முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சான்றிதழ்கள் எரிந்ததை பலர் அழுதபடி எங்களிடம் காட்டினர். சான்றிதழ்களில் புகை வாடை இப்போதும் அடிக்கிறது. இந்தக் கலவரம் `திட்டமிட்டு நடைபெற்றுள்ளது; கோபத்தில் ஏற்படவில்லை’ என நீதிமன்றமே கூறி உள்ளது. மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன. எனவே வருவாய் துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து கொடுப்போம். மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் எளிதில் வழங்க முடியும்.

மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருப்பது தொடர்பாக முதலமைச்சருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். மறைந்த மாணவியின் அருகில் அமர்ந்து படித்த ஒரு மாணவி, அந்த பள்ளியிலேயே படிக்க விரும்புவதாக எங்களிடம் கூறினார். மாணவி இறந்து 24 மணி நேரத்திற்குள் துறை ரீதியான விளக்கம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுவிட்டது. அந்தப் பள்ளியின் அருகே 5 அரசுப் பள்ளி, 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் இருக்கிறது. இதை அந்த மாணவர்களுக்கு பயன்படுத்த முடியுமா என முதல்வரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்தார்.