கல்வி

பெண் தேர்வரின் மேலாடையை ஆண் பாதுகாவலர் கத்தரித்த விவகாரம் - கண்டித்த தேசிய மகளிர் ஆணையம்!

EllusamyKarthik

ராஜஸ்தான் மாநிலத்தில் அம்மாநில குடியியல் பணிக்கான முதற்கட்ட தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வு எழுதுபவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் இணைய இணைப்பும் நிறுத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த தேர்வை எழுத வந்த பெண் தேர்வர் ஒருவரின் மேலாடையை ஆண் பாதுகாவலர் கத்தரித்த விவகாரம் சர்ச்சையை எழுப்பி உள்ளது. பிகானேர் மாவட்டத்தில் அமைந்திருந்த தேர்வு மையம் ஒன்றில் இது நடந்துள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்துள்ளது தேசிய மகளிர் ஆணையம். 

“பெண்கள் இதுமாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளானதை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, இதுகுறித்து ராஜஸ்தான் மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பெண் தேர்வர்களை பரிசோதனையிட ஏன் பெண் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தவில்லை என்ற விளக்கமும் கோரப்பட்டுள்ளது. 

இந்த கடிதத்தின் நகல் ஒன்று ராஜஸ்தான் மாநில குடியியல் பணிக்கான ஆணைய தலைவருக்கும் அனுப்பட்டுள்ளது” என தனது செய்தி குறிப்பில் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.