கல்வி

மாணவிகளே முந்துங்கள்... மாதம் ரூ.1000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

Sinekadhara

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உறுதித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.

அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் அண்மையில் உயர்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் தொகை திட்டத்தின்கீழ், இந்த உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சமூக நலத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால் சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில், மாணவியர் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.