ஜெயப்பிரகாஷ் காந்தி
ஜெயப்பிரகாஷ் காந்தி pt web
கல்வி

விண்வெளி துறையில் சாதிக்க ஆசையா; இதுதான் ரூட்டு! மாணவர்களுக்கு கல்வியாளர் சொல்லும் வழிகாட்டுதல்!

Angeshwar G

”இஸ்ரோ”... கடந்த சில வாரங்களாக நம் காதுகளில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர். உலக அரங்கில் மட்டுமல்லாது விண்வெளியிலும் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்திய பெயர். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் மிகப்பெரிய இரண்டு திட்டங்கள் ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளது, இந்தியர்களை பெருமை கொள்ளச்செய்துள்ளது. அதேவேளையில் இஸ்ரோவில் நாமும் இணைய வேண்டும் என்ற ஆசையையும் மாணவர்கள் மத்தியில் விதைத்துள்ளது.

இஸ்ரோவில் சாதித்த தமிழர்கள்!

விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாத்துரை, அருணன் சுப்பையா, கே,.சிவன், பி.வீரமுத்துவேல், நிகர்ஷாஜி என இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்களின் திட்ட இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் சாதனைத் தமிழர்கள். அரசுப்பள்ளிகளில் படித்து உலகையே தன் பக்கம் திருப்பியவர்கள். சாதனையாளர்களை தமிழர்கள் எப்போதும் கொண்டாடத் தவறியதில்லை. இம்முறையும் அது நிரூபனம் ஆகியுள்ளது.

உலகளவில் பெற்ற பெருமை போன்ற விஷயங்கள் ஒருபுறம் இருக்க, மாணவர்களின் கவனம் தற்போது இஸ்ரோவின் பக்கம் திரும்பியுள்ளது. மருத்துவர், பொறியாளர் என சில படிப்புகளை மட்டுமே பெரும்பான்மை மாணவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வேலையில் இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும், அதற்காக படிக்க வேண்டும் என பல மாணவர்கள் தங்களது கனவுகளை உருவாக்கி வருகின்றனர்.

விண்வெளிப் படிப்புகள் குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “விண்வெளித்துறையில் பணியாற்றுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. பல்துறை வேலைவாய்ப்புகளை வழங்குவது தான் விண்வெளித்துறை. நிதிகளை மேலாண் செய்வது என பல வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால், 80%க்கும் அதிகமானது தொழிற்நுட்பத்தை சார்ந்தது. அதற்கு 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்நிலைக் கல்வியில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை எடுத்து படிக்க வேண்டும். அதன் பின் பொறியியல்.

பொறியியல் படிப்புகளில் ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் போன்ற படிப்புகளைத் தான் படிக்க வேண்டும் என்றில்லை. மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் இன்ஜியரிங், எலக்ட்ரானிக்கல் பல்வேறு படிப்புகளில் பட்டம் பெற்றவர்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் பொறியாளர்களின் பங்களிப்பு இருக்கிறது. பொறியியல் படிக்கும் போதே gate தேர்வு எழுதி இஸ்ரோ பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தும் தேர்வை எழுதி உள்ளே செல்லலாம்.

Aditya l1

மறுபுறம், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஏற்றவகையில், திருவனந்தபுரத்தில் indian institute of space science and technology இருக்கிறது. இங்கு படிக்க வேண்டுமென்றால் JEE தேர்வெழுதி அதில் சிறந்த மதிப்பெண் பெற்று advance தேர்வெழுதி அதில் டாப் 4000 ரேங்குகளுக்குள் பெற்றால் அங்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும். சிறப்பாக படித்தால் internship கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. அதிலும் சிறப்பாக செயல்பட்டார் என்றால் இஸ்ரோவில் நேரடியாக பணி பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இவை போட்டிகள் அதிகமுள்ள படிப்புகள். மேல்நிலைப் படிப்புகளும் இங்கு உள்ளன. ஆனால் gate தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

இங்கு படிக்க முடியாத மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து இங்கு வேலை பார்க்க முடியுமா என பார்க்கிறார்கள். அதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. விண்வெளியில் மாணவர் ஒருவர் சாதிக்க விரும்புகிறார் என்றால் அவருக்கு பல்துறைகளைச் சார்ந்த அறிவு இருக்க வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கண்டிப்பாக இருக்கும்” என்றார்.