செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், மாணவர்களின் அறிவையும் திறமையையும் மதிப்பிடும் முறைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கு உதாரணமாக, IIT கோவாவில் நடத்தப்பட்ட வித்தியாசமான தேர்வு முறை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் வழக்கம்போல் பேராசிரியர்கள் கேள்விகளைக் கொடுப்பதற்குப் பதிலாக, மாணவர்களே கேள்விகளை உருவாக்கி, அதற்கான பதில்களையும் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று மணி நேரத் தேர்வில் முதல் பகுதியில், மாணவர்கள் மொத்தம் 60 மதிப்பெண்களுக்கான கேள்விகளை உருவாக்க வேண்டும். அவற்றை இரண்டு மணி நேரத்திற்குள் தீர்க்கக்கூடிய வகையில் அமைக்க வேண்டும். நண்பர்களுடன் கேள்விகளைப் பகிரக்கூடாது என்றும், மற்றவர்களின் கேள்விகளுடன் ஒற்றுமை இருந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுத்தாளைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த தொழில்முனைவோரான ஆகாஷ் சம்பூர்ணானந்த் பாண்டே, AI காலத்தில் முறைகேடு செய்வதையே அர்த்தமற்றதாக்கும் முயற்சி இது எனப் பாராட்டியுள்ளார். மேலும், சரியான பதிலைக் கண்டுபிடிப்பதைவிட, எந்தக் கேள்விக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை அடையாளம் காண்பதே பொறியியல் துறையில் முக்கியமான திறன் என்றும் தெரிவித்துள்ளார். இதனை 'First-Principles Thinking' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இணையவாசிகள் பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், தேர்வுத்தாளில் 180 நிமிடங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்ற முரண்பாட்டைக் கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வுத்தாளின் உண்மைத்தன்மை குறித்தும் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
AI காலத்தில் மனப்பாடக் கல்விக்கு மாற்றாக, சுயமாகச் சிந்தித்து கேள்விகளை உருவாக்கும் திறனை வளர்க்கும் இந்தத் தேர்வு முறை கல்வித்துறையில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.