கல்வி

மருத்துவ படிப்பில் 10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Sinekadhara

மருத்துவப்படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில், இளங்கலைப் படிப்பில் ( எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 15% இடங்களும், முதுகலைப் படிப்பிற்கு ( எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்பு) 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.

இவ்வாறு மத்திய அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில், தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி கடந்தாண்டு தமிழக அரசு, அதிமுக, பாமக,திராவிட கழகம், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என பரிந்துரை அளித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் ஜூலை 26ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,மத்திய அரசுத் தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் உரிய பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவப்படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.