ஜூலை 17-ம்தேதி தொடங்கும் மருத்துவ படிப்பு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை எதிர்த்து சில மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது என்றும், இதனால் சிபிஎஸ்இ மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாகவும் கூறியிருந்தனர்.
இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் எனவும் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு
இடஒதுக்கீடு வழங்க முடியாது எனவும் மனுதாரர்கள் வாதிட்டனர். எனவே, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
என்றும் மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. பின்னர் தமிழக அரசு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்ற
உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையே நீடிக்க
வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், ஜூலை 17-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கலந்தாய்வை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
வழக்கின் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.