கல்வி

"அய்யா பாஸ் பண்ணி விடுங்க" - சேட் பாக்ஸில் நீதிபதியை கடுப்பேற்றிய மாணவர்கள்

Sinekadhara

வீடியோ கான்பிரன்சில் அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேற்கொண்டபோது, அதில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் அமைதியின்மை காரணமாக அனைத்து வழக்குகளின் விசாரணையையும் நீதிபதிகள் நிறுத்தினர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்குகள், ரிசல்ட் வெளியிட தடை கோரிய வழக்குகள் இன்று 26-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆன்லைன் விசாரணையில் லாக்இன் செய்தனர். வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், மாணவர்கள் என 350 பேர் வரை லாக்இன் செய்திருந்தனர். ஆனால் பலர் ஆடியோவை மியூட் போடாமல் இருந்ததால் மாணவர்களின் பேச்சுகள், வீடுகளில் தொலைக்காட்சி ஒலி, குழந்தைகள் சப்தம் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டன.

நீதிபதிகள் எச்சரித்தும் பலனில்லாததால் வழக்குகள் விசாரணையை நீதிபதிகள் நிறுத்திவிட்டனர். விசாரணை தடைபட்டதால், தேவையில்லாமல் லாக்இன் செய்தவர்களை வெளியேறும்படி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் எவரும் வெளியேறவில்லை. அதனால் தேவையில்லாதவர்களை நீதிமன்ற பணியாளர்கள் நீக்கி வருகின்றனர். இதனிடையே, ’’அய்யா பாஸ் பண்ணி விடுங்க’’ என மாணவர்கள் சேட் பாக்ஸில் செய்தி அனுப்பி நீதிபதியை கடுப்பேற்றியுள்ளனர்.

கடந்த விசாரணைகளின் போதும் ஏராளமான மாணவர்கள், விசாரணையில் பங்கேற்று, இடையூறு ஏற்படுத்தினர். அப்போது, மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.