கல்வி

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை...: புதிய உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

webteam

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலை வெளியிட விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்புக்கு, தொலைதூர, கடினமான மற்றும் ஊரக பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு மைய முதுநிலை நிபுணராக பணியாற்றி வரும் மருத்துவர் ஜி.பி.அருள்ராஜ், தனக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வுக்கு அனுமதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கை, காணொலி மூலம் விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து மே 18ம் தேதிக்குள் முடிவெடுக்க தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்டார். மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலை ஜூன் 8-ம் தேதி வரை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏற்கெனவே கலந்தாய்வு துவங்கி விட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மே 4-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறையை முடிக்க வேண்டும் என்பதால் தகுதிப்பட்டியலை வெளியிட அனுமதிக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் தரப்பில் நீதிபதி சுந்தரிடம் முறையிடப்பட்டது.

பட்டியல் வெளியிட்ட பின் ஏதேனும் குறையிருந்தால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் மத்திய - மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி சுந்தர், தகுதிப்பட்டியலை வெளியிட விதித்த இடைக்கால தடையை நீக்கி, பட்டியலை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டார்.