மூலக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி அபிநயா - ஆசிரியர் மணிகண்டன்
மூலக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி அபிநயா - ஆசிரியர் மணிகண்டன் pt desk
கல்வி

அடர்ந்து வனப்பகுதியில் இயங்கும் அரசுப்பள்ளி: ஒரேயொரு மாணவிக்காக 6 கி.மீ நடந்தே செல்லும் ஆசிரியர்!

PT WEB

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மூலக்காடு என்ற கிராமம் உள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த கிராமம், கூடலூரின் ஒரு மூலையில்தான் அமைந்திருக்கிறது. சுற்றிலும் அடர் வனப்பகுதிகள் மற்றும் உயரமான மலைகளுக்கு மத்தியில் உள்ள இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் சுமார் 2000 மக்கள் வாழ்ந்து வந்ததாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மூலக்காடு பகுதியில் இயங்கும் தனியார் தேயிலை தோட்டம் இந்த கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 1984 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. தொடக்க காலத்தில், இந்த பள்ளி சிறப்பாக செயல்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி அறிவை ஏற்படுத்தவே உதவியிருக்கிறது.

மூலக்காடு

ஆனால் காலங்கள் செல்லச் செல்ல தேயிலை விலை வீழ்ச்சி, காட்டு யானைகள் அச்சுறுத்தல் மற்றும் சாலை வசதி இல்லாத காரணங்களால் இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது இந்த கிராமத்தில் 13 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இதன் காரணமாக அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாணவர்களின் சேர்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இப்பள்ளியில் 5 மாணவர்கள் படித்து வந்தனர். அதில் 4 மாணவர்கள் 5 ஆம் வகுப்பை முடித்த நிலையில், அருகிலுள்ள மற்றொரு பள்ளிக்குச் சென்று விட்டனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மூலக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒரேயொரு மாணவியோடு இயங்கி வருகிறது. அப்படியாக அந்த கிராமத்தை சேர்ந்த அபிநயா என்ற மாணவி மட்டுமே இப்பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக படித்து வருகிறார். அந்த மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக கூடலூரில் இருந்து மணிகண்டன் என்ற தலைமை ஆசிரியர், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார்.

மூலக்காடு

கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வரும் நிலையில், அந்த மாணவியின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு இப்பள்ளியை மூடாமல் தொடர்ந்து இயக்கி வருகிறது. இந்த மாணவிக்கு காலை சிற்றுண்டி, மதிய சத்துணவு உள்ளிட்ட அரசின் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த அரசு நடுநிலைப் பள்ளிக்கு, சாலை வசதிகள் கிடையாது. இப்பபள்ளிக்குச் செல்லும் பாதை ஓரங்களில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் காட்டு யானைகளை எந்நேரமும் காண முடியும்.

இந்த கிராமத்திற்கு இரவு 8 மணிக்கு இயக்கப்படும் ஒரேயொரு அரசு பேருந்து, காலை 6:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விடும். அதன் பின்னர் இப்பகுதிக்கு அரசு பேருந்து சேவையும் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிகண்டன், தினந்தோறும் காட்டு யானைகள் அச்சுறுத்தலுக்கு மத்தியில், கரடு முரடான சாலையைக் கடந்து, சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஒரேயொரு மாணவிக்காக பாடம் நடத்துகிறார்.

தற்போது 5 ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவி அபிநயா, அடுத்த ஆண்டு 6 ஆம் வகுப்பில் சேர வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டும். அதே நேரம் அடுத்த கல்வியாண்டில் இப்பள்ளியில் சேர்வதற்கு ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய இந்த பள்ளி அடுத்த கல்வி ஆண்டில் மூடப்படுவது தங்களுக்கு வேதனை அளிப்பதாக கூறியுள்ளனர்.

மூலக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி அபிநயா

தங்கள் குழந்தையின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்பள்ளியை மூடாமல், ஒரேயொரு மாணவிக்காக பள்ளியை செயல்பட அனுமதித்த அரசுக்கு மாணவியின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.