கல்வி

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயம்

Sinekadhara

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இனி சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அத்துடன் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டது.

அதன்படி, தற்போது ஆண்டுக் கட்டணமாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610க்கும், பி.டி.எஸ் படிப்புக்கு ரூ.11,610ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணத்தை ரூ.30 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ. 20 ஆயிரம் எனவும், பி.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3 ஆயிரம் எனவும், எம்.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.5 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயித்துள்ளது.

மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின்கீழ் மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.