கல்வி

பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு... தமிழ்நாடு அரசு ஏற்பாடு!

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்காத நிலையில் அவர்களை உடனடியாக இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இதுகுறித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள். அதில் `பொதுத்தேர்வு 2022-ல் பங்கேற்காத மாணவ/மாணவியர் எண்ணிக்கை குறித்த மீளாய்வு இன்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10th, 11th, 12th பொதுத்தேர்வு எழுதாத மாணவ/மாணவியரை 'உடனடித் தேர்வில்' கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கான 'செயல்திட்டத்தை' தயார் செய்திடும்படி அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் 10, 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கியிருந்தது. அதில் 26.76 லட்சம் மாணவர்கள் எழுத இருந்தனர். பின் 6.49 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காமல் தவற விட்டிருந்தனர். இதில் 12-ம் வகுப்பில் 1,95,292 மாணவ மாணவியர்; 11-ம் வகுப்பில் 2,58,641 மாணவ மாணவியர்; 10ம் வகுப்பில் 2,25,534 மாணவ மாணவியர் என மொத்தம் 6,79,467 பேர் தேர்வை தவறவிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக 6.79 லட்சம் பேர் பொதுத்தேர்வில் பங்கேற்காமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை துணைத் தேர்வில் பங்கேற்க வைக்கும் நடவடிக்கைகளையும் பள்ளிக்கல்வித்துறை துரிதப்படுத்தி உள்ளது.