கல்வி

ஐ.டி துறையில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு நற்செய்தி..!

Rasus

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் டெக் ஆகிய நிறுவனங்கள் புதிதாக ஏராளமானவர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளன.

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் 3-ஆவது காலாண்டில் தனது நிகரலாபம் 24.1 சதவிகிதம் உயர்ந்து 8,105 கோடி ரூபாயாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 3-வது காலாண்டில் 6,827 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ்சின் நிகர லாபம் கடந்த காலாண்டில் 30 சதவிகிதம் குறைந்து, 3,610 கோடியாக உள்ளது. இருப்பினும் வருவாய் 20.3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. முதல் ‌2 காலாண்டுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 7,762 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக, விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 31 சதவிகிதம் அதிகரித்து, 2,544 கோடி ரூபாயாக உள்ளது. அதைத்தொடர்ந்து, விப்ரோ நிறுவ‌னம் கேம்பஸ் இன்டர்வி‌யூ மூலம் தேர்வு செய்யும் ‌பணியா‌ளர்‌கள்‌ எண்ணிக்கையை இரட்டிப்பாக்க‌ திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் கடந்தாண்டு ‌வளாகத் தேர்வு ‌மூலம் 10 ஆயிரம் பேரை தேர்வு செய்த நிலையில், இந்த முறை 20 ஆயிரம் பேரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.‌ ஹெ.சி.எல்.டெக் நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த காலாண்டில் 19 சதவிகிதம் அதிகரித்து 2,611 கோடி ரூபாயை தொட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டில் 10 ஆயிரம் பேரை சேர்க்க உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.