சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வினை எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. அதேபோல், பல்வேறு பள்ளிக் கல்லூரி தேர்வுகள், போட்டித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இருப்பினும் சில தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.
இதனிடையே, தமிழகத்தில் நீட் தேர்வு ஜேஇஇ தேர்வு ஆகியவற்றை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. பேருந்து வசதிகள் இல்லாமலும் கொரோனா அச்சுறுத்தலாலும் பல்வேறு மாணவர்கள் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மறு தேர்வு நடத்த தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.