கல்வி

அரசுப் பள்ளி மாணவர்களா நீங்கள்? இலவச நீட் பயிற்சி வகுப்பிற்கு தேதி அறிவிப்பு

webteam

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, வரும் ஒன்றாம் தேதி முதல் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும்விதமாக, 2017 ஆம் ஆண்டு முதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு‌, வரும் நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அனனத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இ பாக்ஸ் முறை மூலம் கோவை தனியார் நிறுவனம் சார்பில் இந்த இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் விவரத்தை, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து அனுப்புமாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.