கல்வி

TRB தரப்பில் வெளியான போலி அறிவிப்பு... காவல்துறையை நாடிய ஆசிரியர் தேர்வு வாரியம்!

நிவேதா ஜெகராஜா

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு என்ற பெயரில், 47-48 பக்க போலி அறிவிப்பொன்று இணையத்தில் நேற்று உலாவந்தது. இதை மறுத்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளது.

நேற்றைய தினம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பெயரில் 4,136 துணை பேராசிரியர்களுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பிற தமிழ்நாடு கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பு இருப்பதாக அந்த அறிவிப்பு தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை பல மூத்த அதிகாரிகளும், பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களேவும் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் அது போலியானது என்பது பின் தெரியவந்தது.

குறிப்பிட்ட அந்தப் பதிவில், “தகுதியுடையவர்களுக்கு நேரடி பணிநியமனம் இருக்கும். 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் சேவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்” என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை போலவே சுமார் 48 பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு தவறான தகவல் எனவும், இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

உயர்க்கல்வித்துறை செயலர் கார்த்திகையேன் இதுதொடர்பாக ஊடகங்களில் தெரிவித்துள்ள தகவல்களின்படி, “டி.ஆர்.பி மற்றும் உயர்க்கல்வித்துறை தரப்பில் இந்த பணியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட இன்னும் 2 வாரங்கள் ஆகும்” என்றுள்ளார். போலி அறிவிப்பு குறித்து காவல்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக காவல்நிலையத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.