கல்வி

கலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு?

webteam

இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சி-யால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.

பல பாடத்திட்ட வாரியங்கள் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை இன்னும் நடத்தாததால், பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை வழங்கிவிட்டு, ஜூலை மாதத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. 2,3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், முதலாம் ஆண்டு மாணவர்ககுக்கு செப்டம்பர் மாதத்திலும் வகுப்புகளைத் தொடங்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

தேர்வுகளை விரைவாக நடத்த, ஓ.எம்.ஆர் வகை தேர்வு, சரியான விடைகளை தேர்வு செய்யும் வகையிலான தேர்வுகளை நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 6 நாள்களை வேலை நாட்களாக கடைபிடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. யூ.ஜி.சி.-யால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட குழு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, பரிந்துரைகளை ஆலோசித்து விரிவான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் என யு.ஜி.சி தெரிவித்துள்ளது. எனவே, இந்த பரிந்துரைகள் இறுதியானது இல்லை எனவும் யு.ஜி.சி. கூறியுள்ளது.