கல்வி

பொறியியல் மாணவர் சேர்க்கை: இரண்டாம் சுற்று கலந்தாய்வு இன்று தொடக்கம்

webteam

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கையில் இரண்டாம் சுற்று இணையவழி கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்குத் தகுதியுள்ளவர்களாக 22,902 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் 1.63 லட்சம் இடங்கள் உள்ளன. அதில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள 1.12 லட்சம் பேர் தகுதி பெற்றனர்.

முதல்கட்டமாக நடத்தப்பட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கியது. அதில் முதல் சுற்றில் பங்கேற்க 12,263 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் 95 சதவீத மாணவர்கள் முன்பதிவுக் கட்டணம் செலுத்தினர். அதையடுத்து மாணவர்களுக்குப் பிடித்தமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளை இணையதளம் மூலம் இன்றும் நாளையும் (அக்டோபர் 12, 13) தேர்ந்தெடுக்கவேண்டும். பிறகு தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் 14 ஆம் தேதியன்று வெளியாகும். மாணவர்கள் ஒப்புதலுக்குப் பிறகு இறுதி ஒதுக்கீட்டு ஆணை 16 ஆம் தேதி வழங்கப்படும்.

இந்த நிலையில், இரண்டாம் சுற்று கலந்தாய்வு இன்று (அக்டோபர் 12) தொடங்குகிறது. அதன்படி இன்று முதல் 15 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்துவார்கள். அடுத்து கல்லூரிகள் தேர்வு உள்ளிட்ட அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். கலந்தாய்வு பற்றிய கூடுதல் தகவல்களை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இணையதள முகவரி: www.tneaonline.org