கல்வி

‘நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுங்கள்’- தமிழக அரசின் நிலைப்பாடும், மாணவர்களின் நிலையும்!

‘நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுங்கள்’- தமிழக அரசின் நிலைப்பாடும், மாணவர்களின் நிலையும்!

Sinekadhara

தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை இரண்டுக்கும் இடைபட்ட நேரத்திலும் தமிழக அரசு மத்திய அரசிடம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து கல்வியாளர்கள் அளித்த விளக்கங்களை இனி பார்க்கலாம்.

கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி கூறியபோது, “கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசு மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. பொதுத்தேர்வு மதிப்பெண்ணை வைத்தே மருத்துவ சேர்க்கையை மதிப்பீடு செய்யமுடியும். நீட் தேர்வு மதிப்பெண்ணை வைத்துதான் மதிப்பீடு செய்யமுடியும் என்ற அவசியம் கிடையாது. நீட் தேர்வை அறிமுகப்படுத்தும்போது எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவம் இரண்டுக்கும்தான் கட்டாயம் என்று கூறினர். ஆனால் படிப்படியாக மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளிலும் நீட் தேர்வை கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் அனைத்து மாணவர்களுக்கும் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது என்பது சாத்தியம் கிடையாது. எனவே கல்வியாளர்களைப் பொறுத்தவரைக்கும் நீட் என்பது அவசியம் கிடையாது’’ என்றார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியபோது, ‘’மிகவும் ஆணித்தரமாக, தெளிவாக முன்னெடுத்து வைக்கவேண்டிய ஒரு விஷயத்தை தமிழக அரசு எடுத்துவைக்க தவறிவிட்டது என்பதுதான் என்னுடைய கருத்து. ஏனென்றால் நீட் தேர்வை எந்த வல்லுநர் குழுவும் பரிந்துரைக்கவில்லை. ரஞ்சன் ராய் சௌத்ரி வல்லுநர் குழு பரிந்துரைத்தது பொது மருத்துவ நுழைவுத்தேர்வு. அதை எந்தெந்த மாநிலங்கள் விரும்பவில்லையோ அதற்கு விலக்கு அளிக்கலாம் என்றும் கூறியிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு தனது 92ஆவது அறிக்கையில் இதுபற்றி கூறியுள்ளது. எனவே நீட் தேர்வை எந்த வல்லுநர் குழு பரிந்துரைத்து அமல்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசு கூட்டத்தில் கேள்வி எழுப்ப தவறிவிட்டது.

மாநில அரசின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. அதாவது, எந்த வல்லுநர் குழுவும் பரிந்துரைக்காத நீட் தேர்வு வணிகம் சார்ந்தது தானே தவிர, அது எந்தவகையிலும், யாரையும் தகுதிப்படுத்தாது; எனவே பள்ளிக்கல்வியின் மதிப்பெண்தான் தரமான மாணவனுக்கு உத்தரவாதம் கொடுக்கும். தற்போது, உண்மையில் மருத்துவ ஆர்வம் கொண்ட மாணவர்கள் பலர், நீட் தேர்வு பயிற்சிக்கு போதுமான வசதிகள் இல்லாததால் இந்த துறையிலிருந்தே தங்களை விலக்கிக்கொண்டுள்ளனர்.

எனவே 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் என்பதே சிக்கலாக மாறிவிடும். எனவே தமிழகத்தில் நீட் விலக்கு என்பது தமிழகத்தில் சமூக நீதி அடிப்படையிலான மருத்துவ கல்வியும், மருத்துவ சுகாதாரமும் சம்பந்தப்பட்டது. எனவே நீட் விலக்கு பெறுவதுதான் நியாயமானது’’ என்று கூறினார்.