கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளனர் மதுரைக்கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
உசிலம்பட்டி பகுதியில் உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் பேசியிருக்கும் நீதிபதிகள், ”அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல், அவர்களின் திறமை மற்றும் கல்வித்தகுதியை அடிப்படையாகக் கொண்டு, முழு கல்விச்செலவையும் அரசே ஏற்கிறது” என சுட்டிகாட்டிய நீதிபதிகள் இங்கும் கல்வியை இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை கூறினர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அந்த மனுவில், நான் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர். உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கபடுகிறது. கடந்த 2021- 22 ஆம் ஆண்டு மாவட்ட கல்லூரி இணை இயக்குனர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக 12லட்சத்து 83 ஆயிரம் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை அளிக்கப்பட்டது. அது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி முதல்வர் முதலில் விண்ணப்பம் செய்யும்படியும் பிறகு கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்பது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து கல்லூரி வளாகத்திற்குள் சீர்மரபினர் அமைப்பினர் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்று மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல், மாணவர்களின் திறமை மற்றும் கல்வித்தகுதியை அடிப்படையாகக் கொண்டு, அவரின் முழு கல்விச்செலவையும் அரசே ஏற்கிறது. அதுபோல இங்கும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணங்களை முறைப்படுத்துவது, அதனை மீறுவோர் மீதான தமிழக அரசின் நடவடிக்கை குறித்து தமிழக உயர்கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.