கல்வி

`தேர்வில் ஆள்மாறாட்டமோ, தவறாக நடந்துக்கொண்டாலோ...’- தேர்வுகள் இயக்குநரகம் கடும் எச்சரிக்கை

நிவேதா ஜெகராஜா

பொதுத்தேர்வின் போது ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு எழுதுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என தேர்வுகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் டூ-க்கான பொதுத்தேர்வுகள் வரும் 5-ம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வுகள் 6-ம் தேதியும், பிளஸ் ஒன் தேர்வுகள் 10 ஆம் தேதியும் தொடங்குகின்றன. தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள தேர்வுகள் இயக்கம், தேர்வு மையத்துக்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவருவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் `தேர்வில் மாணவர் காப்பி அடித்தது உறுதி செய்யப்பட்டால், அவரது விடைத்தாள் திருத்தப்படாது என்றும், ஓராண்டுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்படும்’ எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல முறைகேடுகளுக்கு துணை போகும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வின் போது முகக்கவசம் அணியவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “மாணவர்களின் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிய அறிவுறுத்தினோம். கட்டாயமென குறிப்பிடவில்லை. தேர்வு என்றில்லை, பொதுவாக நமது வழிகாட்டு நெறிமுறையில் மாணவர்களின் வருகைப்பதிவே கட்டாயம் என்று குறிப்பிடவில்லை” என்று கூறியிருந்தார்.