கல்வி

ரூ. 1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் இந்த தேதிக்குள் பதிவுசெய்யவும்!- உயர்கல்வித்துறை

நிவேதா ஜெகராஜா

அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் மாணவியரின் விவரங்களை வரும் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டியிருக்கும்.

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேரவையில் அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்ற இந்த திட்டத்தில், இக்கல்வியாண்டு முதல் தொடங்குவதற்கான பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது.

திட்டத்தை தொடங்குவதற்காக, தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக்கணக்கு விவரம் ஆகியவற்றை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும். சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை பெற்ற உடன், அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படும் ஜூலை 15-ம் தேதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். அதற்கு ஏதுவாக, பணிகளைத் தொடங்கியுள்ளது உயர்கல்வித்துறை. தற்போது முதலாம் ஆணடு சேரும் மாணவிகளுக்கு வரும் மாதங்களில் பதிவுசெய்யப்பட்டு முன்தேதியிட்டு உதவித் தொகை வழங்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்: ரமேஷ்